மராட்டியம்: 225 பேருக்கு ஜி.பி.எஸ். பாதிப்பு; 12 பேர் பலி
மராட்டியத்தில் 225 பேருக்கு ஜி.பி.எஸ். பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 12 பேர் பலியாகி உள்ளனர்.;
புனே,
மராட்டியத்தில் கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம் (ஜி.பி.எஸ்.) எனப்படும் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது. இதுபற்றி மராட்டிய சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில், மொத்தம் 225 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றில் 197 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 28 பேர் சந்தேக பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது.
இதனால், இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 6 பேருக்கு ஜி.பி.எஸ். பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 6 பேர் இந்த பாதிப்பினால் உயிரிழந்து இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதுவரை 179 நோயாளிகள் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். 24 பேர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு உள்ளனர். 15 பேர் வென்டிலேசனில் வைக்கப்பட்டு உள்ளனர்.
புனே மாநகராட்சி, புதிதாக சேர்க்கப்பட்ட கிராமங்கள், பிம்ப்ரி சின்ச்வாத் மாநகராட்சி, புனே கிராமப்புற பகுதிகள் மற்றும் பிற மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த பாதிப்புகள் பரவி காணப்படுகின்றன. மாசுபட்ட தண்ணீரால் இந்த மர்ம நோய், பாதிப்பு ஏற்படுத்தி நோயாளிகளை பலவீனப்படுத்துகிறது என கூறப்படுகிறது.
இதனால், நரம்பு மண்டலம் பாதிக்க தொடங்கி, தசை பலவீனம் மற்றும் முடக்கம் போன்ற பல்வேறு அறிகுறிகளும் ஏற்படுகின்றன. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அதனால், குடிமக்கள் கொதிக்க வைத்த குடிநீர் உள்பட தரமுள்ள குடிநீரை குடிக்கவும், புதிதான மற்றும் தூய்மையான உணவை எடுத்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.