எஸ்.ஐ.ஆர். பணிகளில் தவறான பயன்பாடு; தேர்தல் ஆணையாளருக்கு மம்தா பானர்ஜி கடிதம்
எந்தவித சட்டவிரோத நடவடிக்கைக்கும் இந்திய தேர்தல் ஆணையமே பொறுப்பேற்க வேண்டும் என கடிதத்தில் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.;
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடந்து வருகின்றன. இதில், வாக்காளர்களின் பெயர்கள் சேர்ப்பு, தேவையற்ற வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள், தகவல் தொழில்நுட்ப நடைமுறையை தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து, தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமாருக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அதில், முறையான அங்கீகாரம் இன்றி வாக்காளர்களின் பெயர்கள் பின்புலத்தில் நீக்கப்பட்டு உள்ளன என கூறி உள்ளார். தவறான தகவல் தொழில்நுட்ப பயன்பாடு, முறையான நடைமுறையை பின்பற்றாமல் அல்லது தெளிவு இன்றி அல்லது தேர்தல் அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் இதுபோன்று நடந்துள்ளது.
இது பலத்த சந்தேகத்திற்குரிய தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த செயல்களை செய்வதற்கு அதிகாரம் தந்தது யார்? என கேள்வி எழுப்பியுள்ள அவர் எந்தவித சட்டவிரோத, தன்னிச்சையான அல்லது ஒருசார்பு நடவடிக்கைகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையமே பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் அதன் உத்தரவின் பேரிலேயே அல்லது கண்காணிப்பின் கீழேயே இந்த பணிகள் நடைபெறுகின்றன என்றும் தெரிவித்து உள்ளார்.