ம.பி.: ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் பஸ் மோதி ஒரே குடும்பத்தின் 4 பேர் பலி
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ராகேஷ் சுக்லாவின் குடும்பத்தினரால், அந்த பஸ் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது என போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.;
இந்தூர்,
மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உஜ்ஜைன் சாலையில், இரு சக்கர வாகனம் ஒன்றில் நேற்றிரவு மகேந்திர சோலன்கி (வயது 35), அவருடைய மனைவி ஜெய்ஸ்ரீ சோலன்கி (வயது 33) மற்றும் அவர்களுடைய 2 மகன்கள் தேஜஸ் (வயது 14) மற்றும் ஜிகார் (வயது 5) ஆகிய 4 பேர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, தனியார் நிறுவன பஸ் ஒன்று அவர்களுடைய வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேரும் பலியானார்கள். இந்த சம்பவம் நடந்ததும், பஸ் ஓட்டுநர் அந்த இடத்தில் இருந்து தப்பியோடி விட்டார்.
அந்த பஸ் நிறுவனம், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ராகேஷ் கோலு சுக்லா என்பவரின் குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது என போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். பஸ்சின் பின்புறத்தில் கோலு என்றும் எழுதப்பட்டு உள்ளது. விபத்தில் பஸ் உருக்குலைந்து போயிருந்தது.
ஆளுங்கட்சி கொடுத்த நெருக்கடியால், பஸ் டிரைவருக்கு எதிராக பெரிய அளவிலான சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்தோஷ் சிங் கவுதம் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.