நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி நட்டா ஆகியோரை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.;
புதுடெல்லி,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.இதனால், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் ஆயத்தமாகி வருகின்றன. இந்த சூழலில் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றது.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி நாட்டா ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டு இருந்த நிலையில், இன்று மாலை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், கருப்பு முருகானந்தம் ஆகியோரும் உடன் இருந்தனர். தமிழக அரசியல் சூழல் குறித்தும் சட்டமன்ற தேர்தல் குறித்தும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு தொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, கடந்த 32 நாட்களில் 67 கட்சி மாவட்டங்களில் உள்ள 36 கட்சி மாவட்டங்களில் நடைபெற்ற“தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம்” யாத்திரையின் போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நிதி அமைச்சகத்தைச் சார்ந்த மனுக்களை வழங்கினேன்” என்று பதிவிட்டுள்ளார்.