அரசு மருத்துவமனையில் அலட்சியம்; ரத்த வகையை மாற்றி செலுத்தியதால் கர்ப்பிணி உயிரிழப்பு
அரசு மருத்துவமனையில் ரத்த வகையை மாற்றி செலுத்தியதால் கர்ப்பிணி உயிரிழந்தார்.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்தவர் சைனா (வயது 23). கர்ப்பிணியாக இருந்த இவர், குறைந்த அளவு ரத்தப்புரதம் (ஹீமோகுளோபின்) காரணமாகவும், காசநோய் காரணமாகவும் உடல் நலம் குன்றி இருந்தார். இதற்காக ஜெய்ப்பூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியான சவாய் மான் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு கர்ப்பிணி சைனாவுக்கு ரத்தப்பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. ரத்தப்பரிசோதனை முடிவில் அவரது ரத்த வகை 'ஏ பாசிட்டிவ்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
டாக்டரின் பரிந்துரைப்படி, ரத்த வங்கியில் இருந்து 'ஏ பாசிட்டிவ்' வகை ரத்தம் பெறப்பட்டு, சைனாவுக்கு ஏற்றப்பட்டது. பின்னர் திடீரென்று சைனாவுக்கு கடுமையான காய்ச்சல், குளிர், ரத்தக்கசிவு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு, மீண்டும் ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவரது ரத்தவகை 'பி பாசிட்டிவ்' என்று வந்தது.
இதையடுத்து டாக்டர்கள் நடத்திய மறு பரிசோதனையில், சைனாவின் ரத்தவகை 'பி பாசிட்டிவ்' என்பதும், ரத்தவகை மாற்றி ஏற்றப்பட்டதால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதனிடையே உடல்நிலை மிகவும் மோசம் அடைந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.