சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய தடை; இந்த ஆண்டு முதல் அமல்

சபரிமலை சன்னிதானம் பகுதியில் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் அனுமதி இல்லை.;

Update:2025-11-16 15:35 IST

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்.

ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை 65 நாட்கள் நடக்கும் இந்த மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் தேவசம்போர்டு வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த நிலையில், சபரிமலை சன்னிதானத்தில் இந்த ஆண்டு முதல் கேமரா, செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 18-ம் படிக்கு மேல் சன்னிதானம் பகுதியில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, சன்னிதானம் பகுதியில் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் அனுமதி இல்லை.

இதேபோன்று, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மாநில சுகாதாரத்துறை பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேங்கிய நீரில் வாழும் அமீபாவால் மூளை காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதால், ஐயப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பம்பையில் நீராடும் பக்தர்கள் மூக்கை இரு விரல்களால் அடைத்தபடி நீராட சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்