ஓடிபி விவகாரம்- திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு

ஓடிபி விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.;

Update:2025-08-04 13:49 IST

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலை அணுகும் விதமாக ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை திமுக நடத்தி வருகிறது. இதில், பொதுமக்களிடம் இருந்து ஓடிபி பெற சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் திமுக தரப்பில் மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஓடிபி பெறும் விவகாரத்தில் பொதுமக்களிடம் எந்தவித வற்புறுத்தலும் செய்யப்படவில்லை. அவர்கள் தானாகவே தங்களுடைய சுய விருப்பத்தின் பேரில் தான் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்து கையெழுத்திட்டு வருகின்றனர். ஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல் ஐகோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்." என்று கூறப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மன் மற்றும் ஏ.எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், ஆதார் விவரங்களை மக்களிடம் இருந்து கட்சி சேகரிக்கவில்லை என்று அறிக்கை சமர்ப்பித்தார். பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி போன்ற பிற கட்சிகள் செய்வதையே நாங்களும் செய்வதாக கூறிய அவர், இந்த விஷயத்தில் எந்த தடையும் கோரப்படாததால் ஐகோர்ட்டு தவறாக உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்றும் அவர் வாதிட்டார்.

இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. இது தொடர்பாக பேசிய நீதிபதிகள், "இந்தப் பிரச்சினை முக்கியத்துவம் வாய்ந்தது. முழு செயல்முறையும் சந்தேகத்திற்குரியது. நீதிமன்றம் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். நீங்கள் ஐகோர்ட்டையே நாடுங்கள். இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை." என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்