குடியுரிமையை துறந்த 2 லட்சம் இந்தியர்கள்; மத்திய அரசு தகவல்
இந்தியர்கள் எத்தனைபேர் குடியுரிமையை துறந்துள்ளனர் என்று கேள்வி எழுப்பப்பட்டது;
டெல்லி,
வெளிநாடுகளில் வேலை, வெளிநாடுகளில் குடியேறுதல் உள்பட பல்வேறு காரணங்களால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள், இந்திய குடியுரிமையை துறந்து வருகின்றனர்.
இதனிடையே, கடந்த ஆண்டு இந்தியர்கள் எத்தனைபேர் குடியுரிமையை துறந்துள்ளனர் என்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்விக்கு மக்களவையில் மத்திய வெளியுறவுத்துறை துணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார். இதில், கடந்த 2024ம் ஆண்டு 2 லட்சத்து 6 ஆயிரத்து 378 இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 2023ம் ஆண்டு 2 லட்சத்து 16 ஆயிரத்து 219 இந்தியர்களும், 2022ம் ஆண்டு 2 லட்சத்து 25 ஆயிரத்து 620 இந்தியர்களும் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.