ஜாமீன் ரத்தை மறுபரிசீலனை செய்யக்கோரிய பவித்ரா கவுடாவின் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
எந்த ஒரு வழக்கிலும் எங்களது தீர்ப்பை மறு பரிசீலனை செய்யும் நிலை ஏற்பட்டதில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.;
பெங்களூரு,
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கடந்த ஆண்டு (2024) பெங்களூருவுக்கு கடத்தி வரப்பட்டு கொலை செய்யப்பட்டார். நடிகர் தர்ஷனின் தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததால், அவர் கொலை செய்யப்பட்டு இருந்தார். இதுகுறித்து காமாட்சி பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்டோருக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி இருந்தது. ஆனால் அவர்களது ஜாமீனை கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் தர்ஷன், பவித்ரா உள்பட 7 பேர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில், ரேணுகாசாமி கொலையில் தனது ஜாமீனை ரத்து செய்துள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படியும், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் பவித்ரா கவுடா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கே.பி.பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. மனு மீதான விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதிகள் தீர்ப்பு கூறினா். அப்போது ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை மறு பரிசீலனை செய்ய கோரிய பவித்ரா கவுடாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதாவது ஜாமீன் ரத்தை மறுபரிசீலனை செய்ய எந்த அவகாசமும் இல்லை. தீர்ப்பு வழங்கும் போதும், ஆவணங்களை பரிசீலனை நடத்திய போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு இருந்தோம். எந்த ஒரு வழக்கிலும் எங்களது தீர்ப்பை மறு பரிசீலனை செய்யும் நிலை ஏற்பட்டதில்லை. அதனால் மறுபரிசீலனை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.