கேரள முன்னாள் முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தன் மரணம்: மாநிலத்தில் இன்று பொது விடுமுறை

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக தலைமை செயலக தர்பார் அரங்கில் வைக்கப்படுகிறது;

Update:2025-07-22 06:50 IST

திருவனந்தபுரம்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்-மந்திரியுமான வி.எஸ்.அச்சுதானந்தன் நேற்று மரணம் அடைந்தார்.. அவருக்கு வயது 101.

வயது முதிர்வால் 2019-ம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்த அவருக்கு, கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் சிறுநீரக பிரச்சினையாலும் அவர் அவதிப்பட்டார். ஆனால் அவருக்கு சிகிச்சை பலனளிக்கவில்லை. இதனால் வி.எஸ்.அச்சுதானந்தன் நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு மரணம் அடைந்தார்.

இதையடுத்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் ஏ.கே.ஜி. கல்வி ஆராய்ச்சி மையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தியதும், இரவு 8 மணிக்கு அவரது வீட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக தலைமை செயலக தர்பார் அரங்கில் வைக்கப்படுகிறது. பின்னர் பிற்பகல் 2 மணிக்கு தேசிய பாதை வழியாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் ஆலப்புழை எடுத்து செல்லப்படுகிறது.

நாளை (புதன்கிழமை) காலையில் ஆலப்புழை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதையுடன் ஆலப்புழை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள், காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மறைந்த வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு வசுமதி என்ற மனைவியும், அருண்குமார் என்ற மகனும், வி.வி.ஆஷா என்ற மகளும் உள்ளனர்

இதனிடையே வி.எஸ். அச்சுதானந்தனின் மறைவையொட்டி கேரளாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

எளிமையின் உருவமான அச்சுதானந்தன்

1923-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி ஆலப்புழை மாவட்டம் புன்னபுராவில் பிறந்தவர், வி.எஸ்.அச்சுதானந்தன். அவருடைய இயற்பெயர் சங்கரன் அச்சுதானந்தன். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். 7-ம் வகுப்பு வரை படித்த அவரால், தொடர்ந்து படிக்க முடியவில்லை. இதனால் துணிக்கடையில் அவர் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து அவர் கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார்.

கேரளாவின் மூத்த அரசியல்வாதியான வி.எஸ்.அச்சுதானந்தன் மிகவும் எளிமையானவர். கேரளாவில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்தவர். இதுதவிர 1992-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையும், 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரையும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக மக்கள் பணியாற்றினார். பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும் எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்காதவர்.

1980-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராகவும், நீண்ட காலம் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராகவும் இருந்தவர். அவரது மறைவு கேரள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும் பேரிழப்பாகும்.

ஊழலுக்கு எதிராக போராடியவர்

வி.எஸ்.அச்சுதானந்தன், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஊழலுக்கு எதிராக கடுமையாக போராடினார். இடமலையார் அணை கட்டுமான ஊழலில் ஈடுபட்ட முன்னாள் மின்சாரத்துறை மந்திரி பாலகிருஷ்ண பிள்ளைக்கு எதிராக அவர் நடத்திய தொடர் சட்ட போராட்டம் இன்றும் பேசப்படுகிறது. அந்த சட்ட போராட்டம் மூலம் மந்திரியையும் சிறைக்கு அனுப்பினார். புன்னபுராவில நடந்த போராட்டம் ஒன்றில் போலீசாரின் கொடூர தாக்குதலுக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்