வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.262 கோடி மெத்தப்பெட்டமைன் பறிமுதல் - பெண் உள்பட 2 பேர் கைது
டெல்லியில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் சிக்கிய சம்பவங்களில் இதுவும் ஒன்று என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.;
புதுடெல்லி,
டெல்லியில் சாதர்பூர் பகுதியில் ஒரு வீட்டில் அதிக மதிப்புவாய்ந்த ‘மெத்தப்பெட்டமைன்’ போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு, உளவுத்துறை ரகசிய தகவல் அளித்தது.
அதன்பேரில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளும், டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு அதிகாரிகளும் அந்த வீட்டை முற்றுகையிட்டனர். வீட்டில் சோதனை நடத்தினர். அதில், வீட்டில் ‘மெத்தப்பெட்டமைன்’ போதைப்பொருள் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 328 கிலோ இருந்தது. அதன் மதிப்பு ரூ.262 கோடி ஆகும்.
இதையடுத்து அவற்றை பதுக்கி வைத்து இருந்ததாக அந்த வீட்டில் இருந்த நாகாலாந்து பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். நாகாலாந்து போலீசாரின் ஒத்துழைப்புடன் அப்பெண் கைது செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் சிக்கிய சம்பவங்களில் இதுவும் ஒன்று என்று கூறியுள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளுக்கும், டெல்லி போலீசாருக்கும் பாராட்டு தெரிவித்தார். போதை இல்லாத இந்தியாவை உருவாக்க இந்நடவடிக்கை உதவும் என்றும் அவர் கூறினார்.
இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலில் தொடர்புடைய மற்றவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளி, வெளிநாட்டில் இருந்து இயங்கி வருவதாகவும், அவர் வேறு ஒரு போதைப்பொருள் வழக்கிலும் தேடப்பட்டு வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அவரை பிடித்து இந்தியாவுக்கு கொண்டுவர முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.