வீட்டுக்கு ரூ.22 ஆயிரம் மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி: வாலிபர் செய்த விபரீத செயல் - இருளில் தவித்த மக்கள்

கடன் வாங்கி மின் கட்டணம் 22 ஆயிரத்தை செலுத்தும்போது அலுவலக நேரம் முடிந்துவிட்டது, நாளை வந்து கட்டும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.;

Update:2025-11-16 13:12 IST

கொச்சி,

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் உரி பகுதியை சேர்ந்தவர் முகமது முன்வர்(வயது 24). இவரது வீட்டில் விலை உயர்ந்த மின்சாதன பொருட்கள் இல்லை. ஆனாலும் கடந்த 2 மாதத்துக்கான மின் கட்டணம் ரூ.22 ஆயிரம் என வந்துள்ளது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த முகமது முன்வர், தங்கள் பகுதிக்குட்பட்ட நெல்லிகுன்னு மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விசாரித்தார். அப்போது அதிகாரிகள் ஓரிரு நாளில் மின்கட்டணத்தை செலுத்த வேண்டும், இல்லையெனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அங்கிருந்து சென்ற முகமது முன்வர், பலரிடம் கஷ்டப்பட்டு கடன் வாங்கி ரூ.22 ஆயிரத்தை திரட்டி சம்பவத்தன்று மாலை 5 மணியளவில் மின்வாரிய அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று மின்கட்டணத்தை செலுத்த முயன்றார்.

அப்போது அதிகாரிகள் அலுவலக நேரம் முடிந்துவிட்டது, நாளை வந்து மின்கட்டணத்தை செலுத்தும்படி கூறியுள்ளனர். மேலும் வீட்டில் இருந்து அவரது தந்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த முகமது முன்வர், மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று சுற்றுவட்டார பகுதியில் உள்ள 24 டிரான்ஸ்பார்மர்களின்(மின் மாற்றிகள்) பியூஸ் கேரியர்களை அடுத்தடுத்து உருவி எடுத்துச் சென்றார். இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடு, கடைகள் மின்சாரம் இன்றி இருளில் மக்கள் தவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முகமது முன்வரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்