200 வகை சமோசா செய்து அசத்தும் கடைக்காரர்; வைரலான வீடியோ
சமோசா என்றால் உள்ளே உருளைக்கிழங்கு, பட்டாணி மற்றும் வெங்காயம் இருக்கும்.;
ஜலந்தர்,
தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் நெருங்கியுள்ளன. வீட்டில் அனைவரும் சுடச்சுட இனிப்பு, பலகாரம் ஆகியவற்றை செய்து அடுக்கி வைப்பார்கள். இந்நிலையில், தெருவோர கடைக்காரர் ஒருவர் உணவு வகையில் தன்னுடைய அசாத்திய திறமையை வெளிப்படுத்தி உள்ளார். அவர் 200 வகை சமோசாக்களை செய்து அவற்றை விற்பனை செய்து வருகிறார்.
பொதுவாக சமோசா என்றால் உள்ளே உருளைக்கிழங்கு, பட்டாணி மற்றும் வெங்காயம் இருக்கும் என நினைவுக்கு வரும். முக்கோண வடிவில் மடித்து வைக்கப்பட்டிருக்கும். பொன்னிறத்தில் பொரித்து எடுத்து தட்டில் வைத்து தரும்போது, அதன் சுவையே தனித்துவமுடன் இருக்கும்.
ஆனால், பஞ்சாப்பின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள கடைக்காரர் பீன்ஸ் சமோசா, வாழைப்பழ சமோசா, பனீர் சமோசா, கோபி சமோசா, சோயா சமோசா, நூடுல்ஸ் சமோசா, காளான் சமோசா என வகை வகையாக செய்து விற்கிறார்.
இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதனை லைக் செய்து வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் விமர்சனங்களையும் பதிவிட்டு உள்ளனர்.