‘அனைவரையும் நிலவுக்கு அனுப்பி விடலாமா?’ - நிலநடுக்கம் தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு

நிலநடுக்க பாதிப்புகளை குறைக்கும் முன்னேற்பாடுகளை அரசாங்கம்தான் கவனித்துக் கொள்ள வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.;

Update:2025-12-12 18:45 IST

புதுடெல்லி,

இந்தியாவில் 75 சதவீத நிலப்பரப்பு நிலநடுக்க பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயத்தில் இருப்பதாகவும், இதனை எதிர்கொள்ள தகுந்த முன்னேற்பாடுகளை செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி சந்தீப் மெஹ்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், முன்பு டெல்லி மட்டும்தான் அதிக நிலநடுக்க அபாயம் கொண்ட பகுதியாக கருதப்பட்டது, ஆனால் சமீபத்திய ஆய்வுகளின்படி சுமார் 75 சதவீத இந்திய நிலப்பரப்புக்கு இந்த அபாயம் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் மனுதாரரிடம், “அப்படியென்றால் அத்தனை பேரையும் நிலவுக்கு அனுப்பி விடலாமா?” என்று கேட்டனர்.

இதற்கு மனுதாரர் தரப்பில், சமீபத்தில் ஜப்பானில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது நீதிபதிகள், “இந்த நாட்டிற்கு முதலில் எரிமலைகளை கொண்டு வர வேண்டும். அதன் பிறகு ஜப்பானுடன் நாம் ஒப்பீடு செய்யலாம்” என்றனர். மேலும், எதிர்காலத்தில் நிலநடுக்கம் ஏற்படும் சமயத்தில் பாதிப்பை கட்டுப்படுத்த முன்னேற்பாடுகளை செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் விடுத்த கோரிக்கைக்கு, “அதை அரசாங்கம்தான் கவனித்துக் கொள்ள வேண்டும். கோர்ட்டு எதுவும் செய்ய முடியாது” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்