கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சென்னை ஐகோர்ட்டு பதிவாளரை சேர்க்க வேண்டும் - சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
தனி நீதிபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.;
புதுடெல்லி,
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த அக்டோபர் 13-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், சி.பி.ஐ. விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில் ஐகோர்ட்டு அமைத்த எஸ்.ஐ.டி.யும், மாநில அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையமும் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு பதிவாளரை சேர்க்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக தனி நீதிபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் கூட்டங்களை நடத்துவதற்கான விதிமுறைகளை வகுக்கவே ஆணையம் அமைக்கப்பட்டது என்றும் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். ஆணையத்தின் நோக்கத்தை கேட்டறிந்த சுப்ரீம்கோர்ட்டு, தமிழக அரசின் கோரிக்கையை உடனடியாக ஏற்க மறுத்துவிட்டது.
தொடர்ந்து நடந்த விசாரணையின்போது நீதிபதி, “கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை தனி நீதிபதி எப்படி விசாரித்தார்..? சென்னை ஐகோர்ட்டில் நடப்பது எதுவும் சரியாக இல்லை” என்று கூறினார். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் பதில் மனு, விளக்க மனு உள்ளிட்டவை அனைத்தையும் சேர்த்து ஜனவரியில் விசாரிப்பதாக கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.