எஸ்.ஐ.ஆர். விவகாரம்; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் 2 மணி வரை ஒத்தி வைப்பு

விதி 267-ன் கீழ் 20 நோட்டீசுகளை சபாநாயகர் சி.பி. ராதாகிருஷ்ணன் நிராகரித்ததும் போராட்டம் தீவிரமடைந்தது.;

Update:2025-12-02 13:16 IST

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நடப்பு ஆண்டின் கடைசி கூட்டத்தொடரான குளிர் கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடர் குறுகிய காலத்திற்குள் நிறைவடைந்து விடும். இதனை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர், இந்த குளிர் கால கூட்டத்தொடர் வழக்கம்போல் நடக்கும் ஒரு சடங்கு அல்ல. இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்றார். அவைக்குள்ளே அமளியில் ஈடுபட வேண்டாம். அமளியை வெளியே வைத்து கொள்ளுங்கள் என்றும் அப்போது அவர் கேட்டு கொண்டார்.

இந்த கூட்டத்தொடர் சுமுக முறையில் நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எந்த விஷயம் பற்றியும் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யலாம். இந்தியா எப்போதும் ஜனநாயகத்தை போற்றும் நாடாக உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் நேற்று நடந்தது. மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையேற்று நடத்தினார். துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் மாநிலங்களவை நடந்தது. அவர் துணை ஜனாதிபதியான பின்னர் கலந்து கொள்ளும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்.

இந்த நிலையில், அவையில் எஸ்.ஐ.ஆர். பணிகள், டெல்லி காற்று மாசுபாடு, நெல் ஈரப்பதம், தமிழகத்திற்கான கல்வி நிதியை அதிகரித்து வழங்குவது, டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதுபற்றி விவாதம் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால், மக்களவை மதியம் 12 மணி வரை முதலில் ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின்னர் அவை 12 மணிக்கு மீண்டும் கூடியதும் எஸ்.ஐ.ஆர். பணிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியதும் தொடர் அமளியால், நாள் முழுவதற்கும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவையும் அமளியால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் நாள் முழுமைக்கும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 2-வது நாளான இன்றும் அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோஷங்களையும் எழுப்பினர்.

இதன்பின்னர் காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர். பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் நாடாளுமன்ற வளாக பகுதிகளில் நின்றபடி எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, எஸ்.ஐ.ஆர். பணிகளை நிறுத்துங்கள், வாக்கு திருட்டையும் நிறுத்துங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பெரிய அளவிலான பேனர்களை ஏந்தியபடியும், கோஷம் போட்டபடியும் இருந்தனர்.

இதுபற்றி கார்கே நிருபர்களிடம் கூறும்போது, ஜனநாயகம் பாதுகாக்கப்பட மற்றும் அநீதிக்கு எதிரான எங்களுடைய போராட்டம் தொடரும் என்றார். இந்நிலையில், மக்களவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த சூழலில், அவை நடவடிக்கைகளில் பாதகம் ஏற்படும் வகையில் அடிக்கடி அவை ஒத்தி வைக்கப்படும் சூழல் காணப்படுகிறது.

இந்நிலையில், 12 மணியளவில் அவை மீண்டும் கூடியபோது, எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக கோஷம் எழுப்பியபடி, மாநிலங்களைவையின் மைய பகுதிக்கு வந்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பாக விவாதம் நடத்தவும் கோரிக்கை வைத்தனர். விதி 267-ன் கீழ் 20 நோட்டீசுகளை சபாநாயகர் சி.பி. ராதாகிருஷ்ணன் நிராகரித்ததும் போராட்டம் தீவிரமடைந்தது. விவாதம் நடத்த வேண்டும் என கார்கே கோரிக்கை வைத்து வலியுறுத்தினார். இதனால், நேரமில்லா நேரம் நடந்து கொண்டிருந்தபோது, கடும் அமளி ஏற்பட்ட சூழலில் அவையை பகல் 2 மணி வரை ஒத்தி வைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதேபோன்று மக்களவை நடவடிக்கைகளும் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பிய அமளியால், முடங்கியது. அவை கூடிய 10 நிமிடங்களில், பகல் 2 மணி வரைக்கு ஒத்தி வைத்து உத்தரவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்