முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு.. ஒரு கிலோ ரூ.600-க்கு விற்பனை.. எங்கு தெரியுமா..?
ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.600-க்கு விற்கப்படுவதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.;
பெங்களூரு,
காய்கறியில் முருங்கைக்காய்க்கு என்று தனி குணம் உண்டு. சாம்பாரில் முருங்கைக்காயை சேர்க்காமல் இருக்கமாட்டார்கள். மேலும் முருங்கை கீரைக்கும் தனி மவுசு உண்டு. கிராமப்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் முருங்கை மரம் இருப்பதை பார்த்திருக்கிறோம். அந்த அளவிற்கு முருங்கைக்காய் மலிவாக கிடைக்கும். ஆனால் தற்போது பெங்களூருவில் முருங்கைக்காய் விலையை கேட்டால் பலருக்கு தலைசுற்றும் அளவிற்கு பீதி ஏற்படுகிறது.
பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றின் விலை உயர்ந்து கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் தற்போது முருங்கைக்காயின் விலை ஒரு கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனை ஆகிறது என்று கூறினால் நம்ப முடிகிறதா?. ஆனால் அது தான் உண்மை. இதில் இன்னும் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு ஜோடி முருங்கைக்காய் பெங்களூரு கே.ஆர். மார்க்கெட்டில் ரூ.100-க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், 'தமிழ்நாட்டில் இருந்து தான் பெங்களூருவுக்கு முருங்கைக்காய் வருகிறது. முன்பு சுமார் 100 டன் அளவில் முருங்கைக்காய் வரத்து இருந்தது. ஆனால் தமிழகத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக தினமும் 30 முதல் 40 டன் அளவிலேயே முருங்கைக்காய் வரத்து உள்ளது. அதனால் தான் மொத்த விலையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.500-க்கும், சில்லறை விலையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.600-க்கும் விற்கப்படுகிறது. விலை உயர்ந்தாலும் முருங்கைக்காய் விரைவில் காலியாகி விடுகிறது" என்றார்.
தக்காளி விலையும் உயர்வு
இதேபோல் தக்காளி விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பெங்களூருவுக்கு கோலாரில் உள்ள ஏ.பி.எம்.சி. மார்க்கெட் மற்றும் சிக்பள்ளாப்பூரில் இருந்து தான் தக்காளி வரத்து அதிக அளவில் இருந்து வருகிறது. அங்கு 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.700-க்கு விற்கப்படுகிறது. இதன்மூலம் சில்லறை விலையில் ஒருகிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.90 வரை விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.