சனாதன தர்மம் குறித்த பேச்சு; உதயநிதி ஸ்டாலினை பதவிநீக்கம் செய்ய வேண்டும் - பா.ஜ.க. தாக்கு
உதயநிதி ஸ்டாலின் பதவியில் நீடிப்பதில் எந்த நியாயமும் இல்லை என ஷேசாத் பூனாவாலா தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
கடந்த 2023-ம் ஆண்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அதில் அவர் பேசிய, சனாதன தர்மம் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது என்றும், டெங்கு, மலேரியாவைப் போல் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி அமித் மாளவியா என்பவர் ‘எக்ஸ்’ தளத்தில் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் ஆகியோரின் படங்களை பதிவிட்டு, சில சர்ச்சை கருத்துகளை தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. வக்கீல் அணி நிர்வாகி தினகரன், திருச்சி போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் அமித் மாளவியா மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
அதே சமயம், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அமித் மாளவியா, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணயின் முடிவில், அமித் மாளவியா மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினை பதவிநீக்கம் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
“ஐகோர்ட்டின் கண்டனத்திற்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் பதவியில் நீடிப்பதில் எந்த நியாயமும் இல்லை. அவரை உடனடியாக துணை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். மேலும் இந்த நாட்டின் 80 சதவீத மக்கள்தொகைக்கு எதிராக, அதாவது இந்து சமூகத்திற்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.