வங்காளதேசத்தில் தொடரும் கொடூரம்: இந்து ஆட்டோ டிரைவர் படுகொலை; பா.ஜ.க. கடும் கண்டனம்
வீட்டில் இருந்து இரவு 8 மணியளவில் ஆட்டோவில் வெளியே சென்றவர் பின்னர் காணவில்லை.;
புதுடெல்லி,
வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மாணவர் போராட்டம் தொடர்ச்சியாக அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அந்நாட்டில் இருந்து தப்பினார். இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். அடுத்த மாதம் பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட வங்காளதேசத்தில் இடைக்கால தலைவராக பேராசிரியரான முகமது யூனுஸ் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாத மத்தியில் வன்முறை வெடித்தது. இதில், இந்துக்கள் இலக்காக கொள்ளப்பட்டு கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை ஆலை தொழிலாளி, மருந்து கடை உரிமையாளர், 3 தொழிலதிபர்கள் உள்பட 6 இந்துக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், வங்காளதேசத்தின் பெனி மாவட்டத்தில் தகன்பூயன் பகுதியில் வசித்து வந்தவர் ஷோமிர் குமார் தாஸ் (வயது 28). இந்துவான இவர் ஆட்டோ டிரைவராக இருந்து வந்துள்ளார்.
கடந்த ஞாயிற்று கிழமை இரவு 8 மணியளவில் வீட்டில் இருந்து ஆட்டோவில் வெளியே சென்றுள்ளார். அதன்பின்னர் அவரை காணவில்லை. இதுபற்றி பெனி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஷபிகுல் இஸ்லாம் கூறும்போது, நேற்று அதிகாலை 2 மணியளவில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.
போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று அவருடைய உடலை கைப்பற்றினர் என்றார். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. எனினும், சந்தேகத்திற்குரிய விசயம் எதுவும் தெரிய வரவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் கூறினார்.
இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. இன்று கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமித் மாளவியா கூறும்போது, வங்காளதேசத்தில் இடைக்கால அரசில் மத சிறுபான்மையின மக்கள் பலர் கொல்லப்படுவதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அந்நாட்டில் மத சிறுபான்மையின உயிர்களை பற்றி யாரும் கவலை கொள்வதில்லை. இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் உள்ளிட்ட பிற மத சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் எந்தவித தாக்குதல்களையும் கட்டுப்படுத்த இடைக்கால அரசு தவறி விட்டது.
இதில் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு மறு உத்தரவாதம் அளிக்கும் வகையிலும் எதுவும் தரப்படவில்லை. ஆறுதல் வார்த்தை கூட கூறவில்லை. இந்த தாக்குதல்கள் கற்பனையானவை என அதன் தலைவர் புறந்தள்ளுவது அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்து உள்ளார்.
ஆட்டோ டிரைவர் ஷோமிர் கொல்லப்பட்டதுடன் அவருடைய வாழ்க்கைக்கு உதவியாக வைத்திருந்த ஆட்டோவை அந்த கும்பல் திருடி சென்று விட்டது என்றும் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.