பழங்குடியின பெண் பலாத்காரம் செய்து கொலை; பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி ஆறுதல்
இந்த விஷயத்தில் தன்னால் ஆன உதவிகளை செய்வதாக ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.;
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு, 45 வயதான பழங்குடியின பெண், 2 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதில் மறுநாள் அந்த பெண் பரிதாபமாக இறந்தார். இதில் சம்பந்தப்பட்ட 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பழங்குடியின பிரிவு தலைவர் விக்ராந்த் பூரியா, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்தார். அப்போது அவர், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியை செல்போனில் வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேச வைத்தார்.
ராகுல் காந்தி, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் இந்த விஷயத்தில் தன்னால் ஆன உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்தார். அதுபற்றிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது.
பின்னர், விக்ராந்திடம் பேசிய ராகுல்காந்தி, "இந்த விவகாரத்தை தொடர்ந்து கவனித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவும்" உத்தரவிட்டார். இந்த விவகாரம் குறித்து ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.