உத்தரகாண்ட்: மீண்டும் மேகவெடிப்பு, வெள்ளம்; வீடுகள், கடைகள், ஓட்டல்கள் சேதம்

உத்தரகாண்டில் இன்று மீண்டும் மேகவெடிப்பு சம்பவம் ஏற்பட்டதில், வீடுகள், கடைகள், ஓட்டல்கள் சேதம் அடைந்துள்ளன.;

Update:2025-08-06 15:34 IST

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஹர்சிலுக்கு அருகிலுள்ள தாராலி பகுதியில் நேற்று திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், வீடுகள், கட்டிடங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து, உள்ளூர் காவல்துறை, எஸ்.டி.ஆர்.எப், ராணுவம் மற்றும் தீயணைப்பு படைகளின் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேக வெடிப்பால் ஒரு கிராமமே மூழ்கிய சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள்.

இந்நிலையில், உத்தரகாண்டில் இன்று மீண்டும் மேகவெடிப்பு சம்பவம் ஏற்பட்டு உள்ளது. பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள சைன்ஜி கிராமத்தில் மேகவெடிப்பால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், ஓட்டல்கள் சேதம் அடைந்துள்ளன. உத்தர்காசியில் ரெட் அலர்ட் இன்னும் உள்ளது.

உத்தரகாண்டில் மேகவெடிப்பு மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு முதல்-மந்திரி தமி, நேரில் சென்று பார்வையிட்டார். இதேபோன்று, பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதன்பின் அவர் இன்று கூறும்போது, இதுவரை 130 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். 50 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என்றார். 230 வீரர்கள் நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார். எனினும், பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு மீட்பு பணியில் தொய்வும் காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்