ஜார்கண்ட் மாநிலத்தில் தேடப்பட்டு வந்த நக்சல் பயங்கரவாதி கைது
ஜார்கண்ட் மாநிலத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய நக்சல் பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர்.;
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலம் ஜட்ரா மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். புட்ஸ்கியா பகுதியில் நடத்திய வாகன சோதனையின்போது ஒரு காரில் 4 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர், முக்கிய நக்சல் பயங்கரவாதி என்று தெரியவந்தது.
அவரது தலைக்கு மாநில அரசு ரூ.15 லட்சமும், தேசிய புலனாய்வு அமைப்பு ரூ.3 லட்சமும் பரிசு அறிவித்து தேடி வந்தனர். அவர் மீது 75-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மாவோயிஸ்டு பயங்கரவாத அமைப்புடன் இணைந்து தனி அமைப்பு நடத்தி கமாண்டராக செயல்பட்டு வந்துள்ளார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஒரு துப்பாக்கி மற்றும் ஏராளமான வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.