பீகாரில் ஜன் சுராஜ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் - பிரசாந்த் கிஷோர்
பீகாரில் ஊழலை ஒழிக்க அதிக அளவிலான மக்கள் ஓட்டளித்துள்ளனர் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.;
பாட்னா,
பீகாரில் நாளை ( நவம்பர் 11) 2ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. நவ.14ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இந்தநிலையில் ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பீகார் மக்கள் ஜாதி, மதம் மற்றும் பணத்தை கடந்து, ஒரு நல்ல சமூகத்திற்காக ஓட்டளிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, பீகாரில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.
பீகாரில் ஊழலை ஒழிக்க அதிக அளவிலான மக்கள் ஓட்டளித்துள்ளனர். பீகாரில் வெற்றி பெற்று ஜன் சுராஜ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும், அல்லது எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம். ஒருவேளை தற்போது நடக்கும் என்.டி.ஏ ஆட்சியை மாற்ற விரும்பவில்லை என்றால் அடுத்த 5 ஆண்டுகள் மக்களுடன் பயணிப்போம், ஆனால் கூட்டணி ஆட்சியில் இடம் பெற மாட்டோம்.
காங்கிரஸ் எம்பி ராகுலின் வருகை பீகாரில் சட்டசபை தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ராகுலுக்கு மாநிலத்தைப் பற்றி தெரியாது. அவர் இங்கு சுற்றிப் பார்ப்பதற்காக மட்டுமே வருகிறார். தேர்தல் பிரசாரத்தில் பீகார் மக்கள் ராகுலின் பேச்சைக் கேட்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.