மரக்கிளை முறிந்து விழுந்து காரில் சென்ற இளம்பெண் பலி

லாரி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது.;

Update:2025-11-21 20:38 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடப்பல் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஆர்த்தி (வயது 28). கார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஆர்ந்தி நேற்று இரவு காரில் திரிச்சூர் மாவட்டம் குண்ணம்குளம் பகுதியில் இருந்து மலப்புரம் மாவட்டம் குட்டிபுரா பகுதிக்கு சென்றுள்ளார். காரை ஷபி என்ற நபர் ஓட்டியுள்ளார்.

இந்நிலையில், திரிச்சூரின் கடவள்ளூர் அருகே சென்றபோது சாலையில் வேகமாக வந்த லாரி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. லாரி மோதிய வேகத்தில் மரத்தின் பெரிய கிளை முறிந்து சாலையில் ஆர்த்தி சென்ற கார் மீது விழுந்தது. அதிக எடைகொண்ட மரக்கிளை முறிந்து காரின் முன் பக்கத்தில் விழுந்தது. இதில் காரின் கண்ணாடி உடைந்து மரக்கிளை முன் இருக்கையில் அமர்ந்து இருந்த ஆர்த்தி மற்றும் கார் டிரைவர் ஷபி மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் தலை, கழுத்து உள்பட உடலின் பல்வேறு பகுதிகளில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் விரைந்து சென்று காருக்குள் சிக்கிய 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், படுகாயமடைந்த ஆர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கார் டிரைவர் ஷபிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மரக்கிளை முறிந்து விழுந்து காரில் சென்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்