பாகூர் ஏரி மீன்பிடி குத்தகை ரூ.51 லட்சத்திற்கு ஏலம்

7 ஆண்டுகளுக்கு பாகூர் ஏரி மீன்பிடி குத்தகை ரூ.51 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

Update: 2022-06-10 18:09 GMT

பாகூர்

7 ஆண்டுகளுக்கு பாகூர் ஏரி மீன்பிடி குத்தகை ரூ.51 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

2-வது மிகப்பெரிய ஏரி

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் சிறியதும், பெரியதுமாக 24 ஏரிகள் உள்ளன. இதில் பாகூர் ஏரி புதுச்சேரி மாநிலத்திலேயே 2-வது பெரிய ஏரியாகும். இந்த ஏரி மொத்தம் 3.60 மீட்டர் உயரமும், 193.50 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டதாகும். பாகூர் ஏரி மூலம் பாகூர், அரங்கனூர், சேலியமேடு, குடியிருப்புபாளையம், நிர்ணயப்பட்டு, ஆதிங்கப்பட்டு, குருவிநத்தம் மற்றும் தமிழக பகுதியில் உள்ள கரைமேடு உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும், மீன் வளர்ப்பு குத்தகை மூலமாக அரசுக்கு வருவாயை ஈட்டி கொடுத்து வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு ரூ. 33 லட்சத்திற்கு பாகூர் ஏரி ஏலம் போனது. அதன்பின்னர், கடந்த 7 ஆண்டு களாக ஏலம் விடப்படவில்லை. இதனால், தனிநபர்கள் வலைவீசி பாகூர் ஏரியில் மீன்களை பிடித்து விற்பனை செய்து, கொள்ளை லாபம் பார்த்து வந்தனர்.

ரூ.51 லட்சத்திற்கு ஏலம்

இதனால், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தனிநபர்களுக்கு சென்றது. எனவே, பாகூர் ஏரியை, மீண்டும் ஏலம் விட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு பாகூர் ஏரியில் மீன்வளர்ப்பு குத்தகை ஏலம் விட நடவடிக்கை எடுத்தது. அதன்படி, நேற்று ஆன்லைன் மூலமாக ஏலம் நடைபெற்றது.

ஏலம் ஆரம்ப தொகையாக ரூ.43 லட்சத்து 50 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. அவற்றில் ரூ.1,000 கூடுதலாக கேட்டு பாகூரை சேர்ந்த ஒருவர், ரூ.43 லட்சத்து 51 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்துள்ளார். உரிய காலத்திற்குள் அவர் 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியையும் சேர்த்து மொத்தம் ரூ.51 லட்சத்து 34 ஆயிரத்து 180-ஐ செலுத்த வேண்டும். இதன் மூலமாக புதுச்சேரி அரசுக்கு கணிசமாக வருவாய் கிடைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்