வேகத்தடை அமைக்கும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல்

புதுவையில் வேகத்தடை அமைக்கும் பணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2023-08-10 18:10 GMT

புதுச்சேரி

வேகத்தடை அமைக்கும் பணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

வேகத்தடைகள் அகற்றம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 7, 8-ந் தேதிகளில் புதுவைக்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். கோரிமேடு ஜிப்மர் கலையரங்கம், ஆரோவில்லில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தை பார்வையிட்ட அவர் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனமும் செய்தார்.

இந்த பகுதிகளுக்கு ஜனாதிபதி காரில் சென்று வந்தார். அவரது கார் தடையின்றி செல்ல வசதியாக சாலைகளில் இருந்த வேகத்தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. ஜனாதிபதி வந்து சென்ற நிலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

போக்குவரத்து நெரிசல்

இன்று மாலை தட்டாஞ்சாவடி காமராஜ் சாலையில் வேகத்தடைகள் அமைக்கும் பணி நடந்தது. மாலை பள்ளி, கல்லூரிகள், அலுவலகம் முடிந்து வீடு செல்லும் நேரம் என்பதால் சாலையை அடைத்து வேகத்தடை அமைத்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர். கடும் சிரமத்துக்கு இடையே அவை ஊர்ந்து சென்றன.

இதுபோன்ற பணிகளை வாகன போக்குவரத்து அதிகம் இல்லாத இரவு மற்றும் மதிய வேளைகளில் செய்தால் என்ன? என்று அதிகாரிகளை திட்டியபடியே பொதுமக்கள் சென்றதை காண முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்