அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

புதுவை அரசின் கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர்கள் பதவி உயர்வு கோரி தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-29 17:58 GMT

புதுச்சேரி

புதுவை அரசின் கலை அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர்கள் பதவி உயர்வு கோரி தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு கல்லூரிகள்

புதுவை அரசின் கீழ் தாகூர் கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு நிறுவனம், காரைக்கால் அறிஞர் அண்ணா கல்லூரி, அவ்வையார் மகளிர் கல்லூரி, மாகி மகாத்மா காந்தி கல்லூரி, ஏனாம் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கல்லூரிகள் உள்ளன.

இந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் 15 ஆண்டுகளாக பதவி உயர்வு, ஊதிய உயர்வு, 5 ஆண்டுகளாக வழங்கப்படாத வீட்டு வாடகைப்படி உள்ளிட்டவைகளை வழங்கக்கோரி கவர்னர், முதல்அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், அரசு செயலர் ஆகியோருக்கு கோரிக்கை விடுவிக்கப்பட்டது. ஆனால் கோரிக்கை தொடர்பாக அரசு சார்பில் எந்த நடவடிக்கை எடுக்காததால் கல்லூரி திறக்கும் நாள் முதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போராட்டக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.

உள்ளிருப்பு போராட்டம்

இந்தநிலையில் கோடை விடுமுறை முடிந்து அரசு கலை, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. லாஸ்பேட்டையில் அரசு தாகூர் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் கல்லூரி போராட்டக்குழு சார்பில் உதவி பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு பொதுசெயலாளர் சங்கைய்யா தலைமை தாங்கினார். இதில் தலைவர் தீபக் உச்சம்பள்ளி, பொருளாளர் குமரசேன், நிர்வாகிகள் கண்ணதாசன், சுனிதா, அது்லயா, சுஜாதா மற்றும் பலர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தியும், அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

தொடரும்

இதேபோல் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு நிறுவனம், பாரதிதாசன் மகளிர் கல்லூரி மற்றும் காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு கலை கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் பேராசிரியர்கள் இரவு அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்