அமுதசுரபி கட்டிடத்தை வங்கி கையகப்படுத்தியது

புதுவையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அமுதசுரபி கட்டிடத்தை வங்கி கையகப்படுத்தியுள்ளது.

Update: 2023-06-17 17:41 GMT

புதுச்சேரி

புதுவையில் கடந்த 2015-16-ம் ஆண்டுகளில் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கப்பட்டது. இவற்றை அமுதசுரபி கொள்முதல் செய்து அரசுக்கு வழங்கியது. இதற்காக வங்கிகளிலும் கடன் பெற்றிருந்தது. இந்தியன் வங்கியில் பெற்ற கடனுக்கு வட்டியும், முதலுமாக ரூ.4 கோடியே 94 லட்சத்தை அமுதசுரபி செலுத்த வேண்டியிருந்தது.

இதுதொடர்பாக அமுதசுரபி நிர்வாகத்துக்கு இந்தியன் வங்கி கடந்த மார்ச் மாதம் நோட்டீசு அனுப்பியது. அதன்பின்னரும் தொகையை செலுத்தாததால் அமுதசுரபி நிர்வாகம் கடனுக்கு அடமானமாக வைத்த வெங்கட்டாநகர் 4-வது குறுக்கு தெருவில் உள்ள 3 ஆயிரத்து 870 சதுர அடி நிலம் மற்றும் கட்டிடத்தையும் கையகப்படுத்தியுள்ளது.

வாங்கிய கடனை செலுத்தாததற்காக அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபியின் நிலம் மற்றும் கட்டிடம் வங்கியினால் கையகப்படுத்தப்பட்ட சம்பவம் அமுதசுரபி ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காத நிலையில் அவர்கள் தற்போது மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்