போதை பழக்கத்தை ஒழிக்க போலீசார் தனிக்கவனம்

புதுச்சேரியில் போதை பழக்கத்தை ஒழிக்க போலீசார் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர் என அமைச்சர் நமச்சிவாயம் தொிவித்தாா்.

Update: 2022-06-25 17:34 GMT

வில்லியனூர்

புதுச்சேரி காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வில்லியனூர் விவேகானந்தா அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு டி.ஜி.பி. ரன்வீர்சிங் கிறிஸ்னியா தலைமை தாங்கினார். ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், ஐ.ஜி.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

போதை பொருட்களால் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். அவர்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்டு கொண்டு வர வேண்டும். போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதை பழக்கத்தை ஒழிக்க போலீசார் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.

இருப்பினும் ஒரு சில கும்பல், மாணவ-மாணவிகள், இளைஞர்களை குறி வைத்து போதை பொருட்களை விற்பனை செய்து அடிமையாக்கி வருகின்றனர். இதை தடுக்க ஆபரேஷன் விடியல் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஆபரேஷன் திரிசூல் என்ற திட்டம் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் விற்பனை செய்வது குறித்து தெரியவந்தால் பொதுமக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்