வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-18 17:10 GMT

அரியாங்குப்பம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.

பழமையான கோவில்

புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினம் மீனவர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. பழமைவாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 5-வது வெள்ளிக்கிழமை அன்று தேரோட்டம் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த தேரோட்டத்தை பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் இருந்து அப்போதைய கவர்னர் டூப்ளே வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதன்பின் ஒவ்வொரு ஆண்டும் தேரை கவர்னர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைப்பது மரபாக இருந்து வருகிறது.

அதன்படி செங்கழுநீர் அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு, இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.

கவர்னர் தொடங்கினார்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் செங்கழுநீர் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதன்பின் மேளதாளங்கள் முழங்க கோவில் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருத்தேரில் செங்கழுநீர் அம்மன் எழுந்தருளினார். பின்னர் தேருக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து காலை 8.10 மணிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.சரவணன்குமார், பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் "அரோகரா அரோகரா" என்று பக்தி கோஷம் எழுப்பியபடி தேரை இழுத்தனர். கோவிலை சுற்றியுள்ள மாடவீதி வழியாக மக்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்ற தேர், காலை 10.10 மணியளவில் மீண்டும் நிலையை வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆரவாரம் செய்தனர்.

அன்னதானம்

தேரோட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், அ.தி.மு.க. மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், தொகுதி செயலாளர் ராஜா, அ.தி.மு.க. பிரமுகர் ஜீவா, இளைஞர் பாசறை மாநில செயலாளர் தமிழ்வேந்தன், அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் தலைவர் அய்யப்பன் மற்றும் புதுச்சேரி, தமிழக பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

அரியாங்குப்பம் முதல் வீராம்பட்டினம் வரை பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டிருந்தது. மேலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பறை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது.

நாளை தெப்ப உற்சவம்

விழாவில் நாளை (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு தெப்ப உற்சவமும், 25-ந் தேதி முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு தலைவர் பரமானந்தன், துணைத் தலைவர் உதயசங்கர், செயலாளர் கஜேந்திரன், பொருளாளர் இருசப்பன், உறுப்பினர் முத்துவேல், தனி அதிகாரி சுரேஷ் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்