ஊட்டிக்கு கடந்த ஆண்டில் 20 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

2024-ம் ஆண்டை விட 2025-ம் ஆண்டு 4 லட்சம் சுற்றுலா பயணிகள் குறைவாக வந்துள்ளனர்.;

Update:2026-01-05 09:28 IST

ஊட்டி,

நீலகிரிக்கு சுற்றுலா வருபவர்களின் முதல் தேர்வாக அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, கடல் மட்டத்தில் இருந்து 2,000 அடி உயரத்தில் மெக்ஐவர் என்ற ஆங்கிலேயரால் கடந்த 1847-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் தாவரங்களை கொண்டு வந்து நடவு செய்துள்ளனர். 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பூங்காவில் 500-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

நூற்றாண்டை கடந்த தாவரவியல் பூங்கா, தற்போது தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

கடந்த 2022-ம் ஆண்டு 24 லட்சம் சுற்றுலா பயணிகளும், 2023-ம் ஆண்டு 28 லட்சம் சுற்றுலா பயணிகளும் தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்து சென்றனர். இதைத்தொடர்ந்து 2024-ம் ஆண்டு 24 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், கடந்த ஆண்டு 20 லட்சம் சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்துள்ளனர். இதன் மூலம் 2024-ம் ஆண்டை விட 2025-ம் ஆண்டு 4 லட்சம் சுற்றுலா பயணிகள் குறைவாக வந்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தாவரவியல் பூங்காவில் டிக்கெட் கட்டணம் அதிகரிப்புக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்துள்ளது. மேலும் ஊட்டியில் உள்ள கர்நாடகா பூங்கா அளவுக்கு, இங்கு சிறப்புகள் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வருகிறது. இதில் தோட்டக்கலைத் துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

இதுபற்றி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், தோட்டக்கலைத் துறைக்கு நல்ல வருவாய் உயர்வு ஏற்பட்டிருக்கிறது. பூங்கா பராமரிப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்தி, பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம். இ-பாஸ் உள்பட பல்வேறு காரணங்களால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து இருக்கலாம் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்