அமெரிக்காவை தொடர்ந்து மெக்சிகோவும் விதிக்கிறது வரி..!

அமெரிக்காவை திருப்திப்படுத்த அவர்களை பின்பற்றி இந்த வரிவிதிப்பை மெக்சிகோ அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.;

Update:2025-12-31 04:31 IST


அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பின்னர் இந்தியா மீது முதலில் 25 சதவீதமும், பின்னர் அதனை 50 சதவீதமாகவும் அதிகரித்தார். இந்த வரியை குறைக்க இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை வழியை திறக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் போனில் பேசினார்கள் என்ற செய்தி, விரைவில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை உறுதிபடுத்தியது. இவ்வாறு ஒரு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை ஒளிவிட்டுக்கொண்டு இருந்தது.

இந்த நேரத்தில், ‘தலைவலி போய் திருகுவலி’ வந்த கதையாக அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவின் நாடாளுமன்றமான செனட்டில் இந்தியா, சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா உள்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் இருந்து மெக்சிகோவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை வரி விதிக்கும் மசோதா நிறைவேறியது.

அதன்படி, இந்த வரிவிதிப்பு வருகிற ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது. மெக்சிகோவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளாத நாடுகளுக்கு இந்த வரி விதிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, மெக்சிகோவுடன் நடத்தும் வர்த்தகத்தில் உபரியாக இருக்கிறது. அதாவது, இந்தியாவில் இருந்து மெக்சிகோவுக்கு கடந்த ஆண்டு 5.7 பில்லியன் டாலர் (ரூ.5.13 லட்சம் கோடி) அளவுக்கு ஏற்றுமதியும், மெக்சிகோவில் இருந்து இந்தியாவுக்கு 2.9 பில்லியன் டாலர் (ரூ.2.61 லட்சம் கோடி) அளவுக்கு இறக்குமதியும் நடக்கிறது.

அதாவது, மெக்சிகோவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி 2.8 பில்லியன் டாலர் (ரூ.2.52 லட்சம் கோடி) அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் இருந்து மெக்சிகோவுக்கு கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்பட மோட்டார் வாகனங்கள், எந்திரங்கள், ஜவுளி, இயற்கை ரசாயனங்கள், அலுமினியம் போன்றவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியா கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சம் கார்களை மெக்சிகோவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

இதுதவிர, அந்த நாட்டில் உள்ள கார் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களையும் அனுப்புகிறது. இந்த வரி விதிப்பால் சீனா அதிகம் பாதிக்கப்படாது. ஏனெனில் மெக்சிகோ, சீனாவில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய ஏற்கனவே முதலீடுகள் செய்துள்ளது.

இந்த பொருட்களெல்லாம் அங்கிருந்து மறுபடியும் அமெரிக்காவுக்கு பூஜ்ஜிய வரியில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது அமெரிக்காவுடன், கனடாவும், மெக்சிகோவும் போட்டிருந்த ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் அமெரிக்காவை திருப்திப்படுத்த அவர்களை பின்பற்றி இந்த வரிவிதிப்பை மெக்சிகோ அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியா தன்னுடைய நட்பு நாடுகளுடன் உள்ள நல்லுறவை இன்னும் அதிகமாக பேணி நமக்கு சாதகமாக வரிவிதிப்பு கொள்கைகளை வகுக்கவேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால் இந்தியாவின் ஏற்றுமதி மட்டுமல்லாமல், உதிரிபாகங்களை தயார்செய்யும் குறு, சிறு நடுத்தர தொழில்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கிடையே இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைப்பதற்காக மத்திய அரசு, மெக்சிகோவுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. விரைவில் இந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு கிடைக்கும் என்று மத்திய அரசும் உறுதியாக நம்புகிறது.

Tags:    

மேலும் செய்திகள்