சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவை: மெட்ரோவிடம் ஒப்படைக்க விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையை மெட்ரோவிடம் ஒப்படைக்க விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.;

Update:2025-12-19 10:30 IST

சென்னை,

சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே ‘மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம்' (எம்.ஆர்.டி.எஸ்.) என்று அழைக்கப்படும் பறக்கும் ரெயில் சேவை கடந்த 1997-ம் ஆண்டு சென்னை கடற்கரையிலிருந்து சேப்பாக்கம் வரை நடந்து வந்தது. இது 2007-ம் ஆண்டில் இருந்து வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டு சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது பறக்கும் ரெயிலில் ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பறக்கும் ரெயில் சேவையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் மாற்றுவதற்கு ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது இறுதி செய்யப்பட்டு வருகிறது. வருகிற ஜனவரி மாதத்தில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெயில்வே மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன. சம்பந்தப்பட்ட துறைகள் இந்த திட்டத்தை பரிந்துரைத்தால், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி, அரசு ஆணை வெளியிடப்படும். இந்த நடைமுறைகள் அனைத்தும் ஜனவரி மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரெயில் சேவைக்கான ரெயில் நிலையங்கள் ரூ.4 ஆயிரத்து 200 கோடி செலவில், வருகிற 2028-ம் ஆண்டுக்குள் புதிதாக மாற்றி அமைக்கப்படுகிறது. இதில் ரூ 1,200 கோடி செலவில் குளிர்சாதன ரெயில்கள் மட்டும் வாங்கப்படுகிறது. ஒவ்வொரு 5 நிமிட இடைவெளியில் ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் 3 பெட்டிகள் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளாகும். வேளச்சேரி-சென்னை கடற்கரை வரையிலான பயணம் இனி எளிதாகவும், சவுகரியமாகவும் மாற உள்ளது. விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பணிகள் அனைத்தும் தொடங்க உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் பறக்கும் ரெயில் சேவையை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் இணைப்பதற்கான தமிழக அரசின் முன்மொழிவுக்கு ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது” என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்