சென்னை மாநகராட்சியின் கட்டுமான வழிகாட்டுதல்களை பின்பற்றிட வேண்டும்: மீறினால் அபராதம்

சென்னையில் வருகிற 22ம் தேதி முதல் இவ்வழிகாட்டுதல்கள் கடுமையாக அமல்படுத்தப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.;

Update:2025-12-19 10:34 IST

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் 21.05.2025 அன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் பிரிவு 5-ன்படி பொதுப் பாதுகாப்பையும் நகரத் தூய்மையையும் உறுதி செய்வதற்காக உயர் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள அனைத்து கட்டுமானப் பொருட்கள், தோண்டப்பட்ட மண், கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் கட்டுமானப் பணிகள் நடைபெறும் வளாகத்திற்குள் மட்டுமே சேமிக்கப்பட வேண்டும். இவ்வகைப் பொருட்களை பொதுச் சாலைகள், நடைபாதைகள், சாலை ஓரங்களில் கொட்டுவதோ அல்லது குவிப்பதோ முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் 500 சதுர மீட்டர் முதல் 20,000 சதுர மீட்டர் வரை கட்டட பரப்பளவிற்கு ரூ.25,000/- அபராதமும், 20,000 சதுர மீட்டருக்கு மேற்பட்ட கட்டிட பரப்பளவிற்கு ரூ.5,00,000/- அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், 500 சதுர மீட்டருக்கு குறைவான கட்டுமானங்களில், கட்டுமானப் பொருட்கள் நடைபாதைகள் அல்லது சாலை ஓரங்களுக்கு எந்தவிதமான தடையையும் ஏற்படுத்தாமல் பொறுப்புடன் கையாளப்பட்டு சேமிக்கப்படுவதை கட்டுமான உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

மாநகராட்சியின் சார்பில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகள், வேலியிட்ட குடியிருப்பு வளாகங்கள், வணிக வளாகங்கள், பெரும் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற கட்டுமானப் பணிகளில் தொடர்ச்சியாக விதிமீறல்கள் நடைபெறுவது மாநகராட்சியின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது.

இத்தகைய விதிமீறல்களால் நடைபாதைகள் மற்றும் சாலையோரங்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்படுவதுடன், பாதசாரிகள் பரபரப்பான சாலைகளில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் நடக்க வேண்டிய நிலை உருவாகிறது. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, பொதுப் பாதுகாப்பு, நகர ஒழுங்கு மற்றும் மக்கள் அன்றாட வாழ்க்கை நேரடியாக பாதிக்கப்படுகிறது.

எனவே, பொதுப் பாதுகாப்பு, இடையூறு இல்லாத நடைபாதை மற்றும் வாகனப் போக்குவரத்து, தூய்மையான மற்றும் வாழத்தக்க நகர சூழல் ஆகியவற்றினை கருத்தில் கொண்டு சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமான வழிகாட்டுதல்கள் 2025னை அனைத்து கட்டுமான நிறுவனங்கள், கட்டுமான உரிமையாளர்கள் முழுமையாகப் பின்பற்றிட வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 22.12.2025 முதல் இவ்வழிகாட்டுதல்கள் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. இந்த வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது எந்தவிதமான தளர்வுமின்றி அபராதம் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, சென்னை நகரத்தை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் அனைவரும் எளிதாக அணுகக்கூடியதாகவும் ஒழுங்குமுறையும் பேணுவதற்கு கட்டுமான உரிமையாளர்கள்/நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்