தென்காசி அருகே பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன்.
உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனைத் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன். விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட கலெக்டரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.
இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.