பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு: கதவை திறந்து வைத்து தூங்கியபோது மர்மநபர் கைவரிசை

வீட்டில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2025-08-31 19:59 IST

கோப்புப்படம் 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பனைவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி மனைவி ஜெபக்கனி (55 வயது). இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவுக்காக குடும்பத்துடன் வந்திருந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவில் ஜெபக்கனி காற்றோட்டத்துக்காக வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கியதாக கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட மர்மநபர் நைசாக வீட்டுக்குள் புகுந்து, ஜெபக்கனி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். உடனே கண்விழித்த ஜெபக்கனி நகையை இறுக பிடித்துக் கொண்டு கூச்சலிட்டு போராடினார்.

இதில் தங்க சங்கிலி இரண்டு துண்டாக அறுந்தது. உடனடியாக மர்மநபர் கையில் கிடைத்த 7 பவுன் தங்க சங்கிலியுடன் இருளில் தப்பி ஓடினார். அவரை குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் விரட்டி பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்