சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிறப்பு வார்டில் 89 பேருக்கு சிகிச்சை; அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆய்வு

தீபாவளி பண்டிகையில், பொதுமக்கள் பருத்தி ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கும்படி தமிழக அமைச்சர் மா. சுப்ரமணியன் வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.;

Update:2025-10-20 15:11 IST

சென்னை,

நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. பண்டிகையை முன்னிட்டு, காலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, புதிய ஆடைகளை உடுத்தி, இனிப்பு மற்றும் பலகாரங்களை உண்டு, வாழ்த்துகளை பரிமாறி கொண்டு, மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதேபோன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளையும் வெடித்து மகிழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ மருத்துவமனையில் உருவாக்கப்பட்டு உள்ள தீபாவளி தீக்காய சிறப்பு வார்டுக்கு இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், டாக்டர்கள் மற்றும் சுகாதார நல பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு, இனிப்புகளை வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், நாங்கள், கீழ்ப்பாக்கம் மருத்துவ மருத்துவமனையில் தீபாவளி தீக்காய சிறப்பு வார்டு ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறோம். நேற்று முதல் இதுவரை, காயமடைந்த 89 பேர் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

அவர்களில் 48 பேர் தீவிர காயமடைந்து உள்ளனர். மற்றவர்கள் சிகிச்சைக்கு பின்னர் வீட்டுக்கு திரும்பி விட்டனர். 48 பேரில் 8 பேருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட உள்ளது என்றார். தொடர்ந்து அவர், பொதுமக்கள் பருத்தி ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கும்படி நான் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன். அதுவே சிறந்தது. சில்க் அல்லது நைலான் உடைகளை அணிய வேண்டாம். காலணிகளை அணிந்து கொண்டு, திறந்த வெளியில் பட்டாசுகளை வெடியுங்கள் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்