திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணை, தொல்லியல்துறை சார்ந்த 7 பேர் கொண்ட குழு ஆய்வு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணை, தொல்லியல்துறை சார்ந்த 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது.;
மதுரை,
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட பகுதியில் சிக்கந்தர் தர்கா உள்ளது. தீபத்தூணுக்கும், தர்காவுக்கும் குறைந்த இடைவெளி இருப்பதாகவும், அங்கு தீபம் ஏற்றும்பட்சத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த மாதம் திருப்பரங்குன்றம் மலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், கார்த்திகை தீப திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகத்துக்கு கடந்த 1-ந்தேதி உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை பின்பற்றி கடந்த 3-ந் தேதி தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் நீதிபதியின் தீர்ப்பை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை அவசர மனுவாக அதே நீதிபதி உடனடியாக விசாரித்தார். கடந்த 3-ந் தேதி மாலை 6.30 மணி அளவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ராம ரவிக்குமாரும் அவருடன் 10 பேரும் சென்று தீபம் ஏற்ற வேண்டும். இவர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்) வீரர்கள் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி அவர்கள் அனைவரும் திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்துக்கு சென்றனர். அங்கு மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், இந்த பகுதியில் 144 தடையை அமல்படுத்தி மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு இருப்பதால் மலை உச்சிக்கு சென்று தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனிடம் மறுநாள் (4-ந்தேதி) முறையிடப்பட்டது. அதன்பேரில் அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, திருப்பரங்குன்றம் பகுதியில் அமலில் இருந்த 144 தடையை ரத்து செய்தார். ராம ரவிக்குமார் தரப்பினர் இன்று இரவு (அதாவது 4-ந்தேதி) மீண்டும் மலை உச்சிக்கு சென்று தீபத்தூணில் இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும். இவர்களுக்கு மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் உரிய பாதுகாப்பை வழங்குவதுடன், தீபம் ஏற்றப்பட்டது குறித்து 5-ந்தேதி அவர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து ராம ரவிக்குமார் தரப்பினர் திருப்பரங்குன்றம் சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து தீபம் ஏற்ற அனுமதி மறுத்தனர். இதனால் 2-வது நாளும் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. பின்னர் 5-ந்தேதி விசாரிக்கப்பட்ட இந்த வழக்கின்போது, அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்று இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், மலையில் தீபம் ஏற்ற சென்ற ராம ரவிக்குமார் தரப்பினருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற முடியாதது ஏன்? என்று மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) கமாண்டன்ட்டிடம் அறிக்கை பெற்று மத்திய அரசு வக்கீல் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணை, தொல்லியல்துறை சார்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காலை 8.45 மணிக்கு தொடங்கிய ஆய்வு 3 மணி நேரமாக நடந்தது. இந்த ஆய்வில் விசாரணைக்கு தேவையான தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தூணில் தீபம் ஏற்றக் கோரிய வழக்கின் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் நிலையில், ஆய்வு நடத்தப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.