சிறுவன் தடுமாறி விழுந்ததில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்

வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தடுமாறி விழுந்ததில் ஒன்றரை மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.;

Update:2025-11-26 21:34 IST

கோப்புப்படம் 

தேனி மாவட்டம் கம்பம் அருகே காக்கில் சிக்கையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி அபிசதா (22 வயது). இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகன் உள்ளான்.

இந்த நிலையில் அபிசதா 2-வது முறையாக கர்ப்பமானார். இதையடுத்து அவர் பிரசவத்திற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கூடலூர் பசும்பொன் நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார். கடந்த மாதம் 14-ந்தேதி கம்பம் அரசு மருத்துவமனையில் அபிசதாவுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் அவர் 2 குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிலேயே வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அபிசதா தனது இரண்டாவது குழந்தையை வீட்டுக்குள் தரையில் படுக்க வைத்துவிட்டு, வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் விளையாடி கொண்டிருந்த மூத்த மகன், திடீரென கால் தடுமாறி தரையில் படுத்திருந்த குழந்தை மீது விழுந்துள்ளான். இதில், குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறி அழுது துடித்தது.

குழந்தையின் அழுகுரல் கேட்டதும் விரைந்து வந்த அபிசதா, குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர், அருகில் இருந்த உறவினர்களை அழைத்துக்கொண்டு குழந்தையுடன் கம்பம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்