தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.;

Update:2025-03-27 12:56 IST

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம், தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 11 மீனவர்களை அவர்களின் விசைப்படகுடன் இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் நோக்குடன் சிங்களப்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் கைது செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை எந்த நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த இலங்கை அரசு, அண்மைக்காலமாக மீனவர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பதையும், ஆண்டுக்கணக்கில் சிறை தண்டனை விதிப்பதையும் வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி கொழும்பில் நடைபெற்ற இந்தியா - இலங்கை ஆகிய இரு நாடுகளின் மீனவர்கள் நலனுக்கான கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில் மீனவர்கள் கைது செய்யப்படுவது அவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது என்பதால் இந்த சிக்கலை மனித நேயத்துடன் அணுக வேண்டும்; இரு நாட்டு மீனவர் அமைப்புகளின் பேச்சுகளுக்கு விரைவாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதன்பின் 5 மாதங்களாகிவிட்ட நிலையில் இரு தரப்புப் பேச்சுகள் இன்னும் ஏற்பாடு செய்யப்படவில்லை. மீனவர்கள் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படுவதும் தொடர்கிறது.

இந்தியா - இலங்கை இடையிலான கடல் பரப்பின் அளவைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது இரு தரப்பு மீனவர்களும் எல்லை தாண்டாமல் மீன் பிடிப்பது சாத்தியம் இல்லை என்பது தான் எதார்த்தம். இதை இலங்கை அரசுக்கு இந்தியா புரிய வைக்க வேண்டும். தமிழக மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இரு தரப்பு மீனவர்களுக்கு இடையே பேச்சு நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்