“இந்திய பொருளாதாரத்தை ஆய்வு செய்தால் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுகிறது” - செல்வப்பெருந்தகை

பா.ஜ.க. அரசின் கடன் தொகை ஏறத்தாழ ரூ.182 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-26 14:26 IST

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

பத்தாண்டு கால டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணித்து அனைத்து மக்களுக்கும் பயன் தருகிற வகையில் ஆட்சி இருந்தது. பிறகு 2014 மக்களவை தேர்தலில் நரேந்திர மோடியின் பொய்யான மற்றும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளில் கவரப்பட்டு பா.ஜ.க. ஆட்சி அமைந்து 11 ஆண்டுகள் ஆகிறது. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் 2019, 2024 மக்களவை தேர்தல்களில் சாதனைகள் என்று சொல்வதற்கு ஏதும் இல்லாத நிலையில் வகுப்புவாத கருத்துகளையும், வெறுப்பு அரசியலையும் பயன்படுத்தி பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்றது. ஆனால், இந்தியாவின் பொருளாதார நிலைமையை ஆய்வு செய்தால் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 90 ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஆசியாவிலேயே மிக மோசமான நாணயமாக இந்தியாவின் ரூபாய் கருதப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள 50 சதவிகித வரி விதிப்பிற்கு உடனடியாக முடிவு எடுக்காத காரணத்தால் இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படுகிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வர்த்தக பற்றாக்குறை என்றுமே இல்லாத அளவிற்கு 41.7 பில்லியன் டாலராக அக்டோபர் மாதத்தில் உயர்ந்திருக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையான வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

மத்திய பா.ஜ.க. அரசின் கடன் தொகை அக்டோபர் 2025 நிலவரப்படி ஏறத்தாழ ரூ. 182 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. 2014 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பதவி விலகுகிற போது, மொத்த கடன் ரூ. 55 லட்சம் கோடி. 1947 முதல் 2014 வரை 67 ஆண்டுகளில் மத்திய அரசுகள் பெற்ற மொத்த கடன் தொகை ரூ. 55 லட்சம் கோடி தான். ஆனால், 11 ஆண்டுகளில் மத்திய பா.ஜ.க. அரசு பெற்ற மொத்த கடன் தொகை ரூ. 127 லட்சம் கோடி. இது ஏறத்தாழ 300 சதவிகிதமாக கடன் உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் கடும் கடன் சுமையினால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. தனிநபர் கடன்சுமை கடந்த 2 ஆண்டுகளில் ரூ.3.9 லட்சத்தில் இருந்து ரூ.4.8 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

அதேபோல, உலக பசி குறியீட்டு எண்ணில் 123 நாடுகளில் 102-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. மக்கள் தொகையில் 12 சதவிகிதத்தினர் ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 5 வயதுக்கு குறைவான 32.9 சதவிகித குழந்தைகள் வளர்ச்சிக் குறைவாகவும், 18.7 சதவிகித குழந்தைகள் பயனில்லாத வகையிலும் இருந்து வருகின்றனர். அதேபோல, 2.8 சதவிகித குழந்தைகள் 5 வயதிற்குள்ளாக இறக்கிற நிலைமை இருக்கிறது. இவையெல்லாம் கடுமையான பசி, பட்டினி காரணமாக ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் வறுமையை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணம் பிரதமர் மோடிக்கு இருக்குமேயானால் பிரதமர் என்ற முறையில் பயணம் செய்வதற்கு ரூ. 8,000 கோடிக்கு சொகுசு விமானத்தை வாங்கியிருக்க மாட்டார். அந்த தொகையை பசியில் வாடுகிற ஏழை, எளியவர்களின் நலனுக்கு ஒதுக்கியிருந்தால் உலக நாடுகளில் பசி குறியீட்டு எண்ணில் இத்தகைய அவலநிலையை அடைந்திருக்க முடியாது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் தனிநபர் வருமானம் ரூ. 1 லட்சத்து 72 ஆயிரமாக இருக்கிறது. அதன்படி, ஒவ்வொருவருடைய மாதம் வருமானம் ரூ. 14,300 ஆக இருக்கிறது. ஆனால், தமிழகத்தின் தனிநபர் வருமானம் தேசிய தனிநபர் வருமானத்தை விட அதிகரித்து ரூ. 1 லட்சத்து 96 ஆயிரத்து 309 ஆக உள்ளது. இது இந்தியாவில் இருக்கிற மாநிலங்களில் மராட்டியத்திற்கு அடுத்து தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் இரண்டாவது இடத்தில் உயர்ந்து இருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களே தவிர, ஏழை எளியவர்கள் அல்ல.

கடந்த 11 ஆண்டுகளில் மொத்த மக்கள் தொகையில் 1 சதவிகித கார்ப்பரேட் முதலாளிகளிடம் 70 சதவிகித சொத்துகள் குவிந்திருக்கிறது. ஆனால், 50 சதவிகித மக்களிடம் 6.4 சதவிகித சொத்துகள் தான் சேர்ந்திருக்கிறது. மொத்த தேசிய வருமானத்தில் இவர்களுக்கு 15 சதவிகிதம் தான் கிடைக்கிறது. இத்தகைய ஏற்றத்தாழ்வு உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லையென்று பொருளாதார ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. நரேந்திர மோடி ஆட்சி என்பது கார்ப்பரேட்கள் சொத்து குவிப்பதற்கு தான் பயன்பட்டிருக்கிறதே தவிர, பசி, பட்டினியில் இருந்து மக்களை மீட்டெடுக்கவோ, வளர்ச்சி திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்புகளை பெருக்கவோ எந்த வகையிலும் பயன்படவில்லை என்பதை தான் பொருளாதார புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. எனவே, மோடி ஆட்சி என்பது ஏழை, எளியவர்களுக்கு எதிரான ஆட்சி என்பதற்கு இதைவிட வேறு எந்த சான்றும் தேவை இல்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்