ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால வெள்ளி நாணயம் கண்டெடுப்பு

பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் சோழர் கால வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டது.;

Update:2025-11-28 21:33 IST

தொல்லியல் விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா நடைபெற்றது. இதில் ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தொல்பொருட்கள் குறித்து அறிந்து கொள்வதற்கு கள ஆய்வுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அந்த வகையில், தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்பார்வையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் கல்லூரி மாணவர்கள் வினோத்குமார், தேவா, சாமுவேல், டேவிட், ராஜ்குமார் ஆகியோர் மேற்பரப்பில் கள ஆய்வு மேற்கொண்டபோது ஒரு நாணயத்தை கண்டெடுத்தனர். அது ராஜராஜ சோழன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயம் என்பது தெரியவந்தது. இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது:-

தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட நாணயம், ராஜராஜ சோழன் காலத்திய வெள்ளி நாணயம் என தெரியவந்துள்ளது. நாணயத்தின் எடை சுமார் 4.35 கிராம் ஆகும். நாணயத்தின் ஒருபக்கத்தில் தேவநாகரி எழுத்தில் "ஸ்ரீராஜராஜ" என்ற பெயர் இடம்பெற்று இருக்கிறது. இதன் மூலம் 985 முதல் 1,014 வரை தமிழகத்தில் ஆட்சிபுரிந்த ராஜராஜ சோழன் காலத்திய நாணயம் என தெரிய வந்துள்ளது.

இந்த நாணயத்தின் ஒரு பக்கம் மலரை கையில் ஏந்தியபடி ஒருவர் நிற்க, அவரது இடது பக்கம் 4 வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும், கீழே மலரும் உள்ளன. வலது பக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. நாணயத்தின் மறுபக்கம் கையில் ஒருவர் சங்கு ஏந்தி அமர்ந்திருக்கிறார். அவரின் இடது கை அருகே தேவநாகரி எழுத்தில்" ஸ்ரீராஜ ராஜ" என எழுதப்பட்டுள்ளது.

இதுவரை தென்பெண்ணை ஆற்றின் மேற்பரப்பு ஆய்வில் ராஜராஜ சோழனின் 50-க்கும் மேற்பட்ட செப்பு நாணயங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் முதன் முறையாக ராஜராஜ சோழனின் வெள்ளி நாணயம் எங்களது கள ஆய்வில் கிடைத்துள்ளது எனவும், தமிழகத்தில் சங்க கால மன்னர்கள் மற்றும் அதன் பின் ஆட்சிபுரிந்த சேரர், சோழர், பாண்டியர் ஆகியோர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் தாமிரபரணி, வைகை, காவிரி போன்ற ஆற்றுப்படுகையில் ஆய்வாளர்களால் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்