எழும்பூர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்

புதுச்சேரி-திருப்பதி ரெயிலுக்கும் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-24 09:27 IST

எழும்பூர்,

புதுச்சேரியில் இருந்து முண்டியம்பாக்கம் வழியாக திருப்பதி வரை தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16112) இயக்கப்படுகிறது. இதேபோல் எழும்பூரில் இருந்து ஒலக்கூர் வழியாக புதுச்சேரி நோக்கி மற்றொரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16115) இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் புதுச்சேரி-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி அமைந்துள்ள முண்டியம்பாக்கத்தில் இதுவரை நிற்காமல் சென்று வந்தது.

எழும்பூர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒலக்கூரில் நிற்காமல் சென்று வந்தது. இதனால் முண்டியம்பாக்கம், ஒலக்கூர் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். எனவே இந்த இரு ரெயில் நிலையங்களிலும் மேற்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று புதுச்சேரி-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் முண்டியம்பாக்கத்திலும், எழும்பூர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒலக்கூரிலும் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி-திருப்பதி எக்ஸ்பிரஸ் நாளை மறுநாள் முதல் முண்டியம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு மதியம் 3.44 மணிக்கு வந்து சேரும். பின்னர் மீண்டும் 3.45 மணிக்கு புறப்பட்டுச்செல்லும்.

இதேபோல் சென்னை எழும்பூர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ஒலக்கூர் ரெயில் நிலையத்திற்கு இரவு 8.04 மணிக்கு வந்து சேரும். பின்னர், 8.05 மணிக்கு புறப்பட்டுச்செல்லும். இந்த அறிவிப்பால் முண்டியம்பாக்கம், ஒலக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்