மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே நீராவி என்ஜின் சோதனை ஓட்டம்
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சோதனை ஓட்டமாக புதுப்பொலிவுடன் நீராவி என்ஜின் இயக்கப்பட்டது.;
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். பச்சை பசேல் என காணப்படும் தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் குகைகள் வழியாக சென்று மலையின் இயற்கை அழகை ரசிப்பதற்காக மலை ரெயிலில் செல்கின்றனர். ஆசியாவில் தற்போதும் பல் சக்கரங்களில் இயங்கும் ஒரே மலை ரெயிலான இந்த மலை ரெயில் முதல் முறையாக குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே கடந்த 1899-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டது.
ஆரம்ப காலத்தில் நிலக்கரி மூலமாக இயக்கப்பட்டு வந்தது. அப்போது சுற்றுச்சூழல் மாசுபாடு, பேசுபொருளாக இருந்தது. இதனால் 2002-ம் ஆண்டு பர்னஸ் ஆயில் மூலமாக இயக்கக்கூடிய வகையில் என்ஜின் மாற்றி வடிவமைக்கப்பட்டது.
இந்தநிலையில் எக்ஸ் கிளாஸ் நீராவி என்ஜின்கள் 3 முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருச்சி பொன்மலை பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி பொன்மலை பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நீலகிரி குயின் என அழைக்கப்படும் எக்ஸ் கிளாஸ் மலை ரெயில் நீராவி என்ஜினை பொலிவுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த என்ஜின் சமீபத்தில் ராட்சத லாரி மூலம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டு, கிரேன்கள் மூலம் ரெயில் பாதையில் இறக்கி வைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சோதனை ஓட்டமாக புதுப்பொலிவுடன் நீராவி என்ஜின் இயக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.30 மணியளவில் குன்னூர் வந்து சேர்ந்தது. விரைவில் இந்த என்ஜினை இயக்க ரெயில்வே துறையினர் முடிவு செய்துள்ளனர்.