திருச்சியில் ஆம்புலன்ஸ் டிரைவருடன் அதிமுகவினர் வாக்குவாதம்
திருச்சியில் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் சுற்றுப்பயணத்தில் உரை நிகழ்த்தினார்.;
திருச்சி,
திருச்சி மாவட்டம் துரையூர் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள இருந்தார். இதற்காக அங்கு அதிமுகவினர் திரண்டு இருந்தனர். அப்போது அங்கு குவிந்த அதிமுகவினர் கூட்டத்திற்கு இடையே ஆம்புலன்ஸ் ஒன்று புகுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுகவினர் ஆம்புலன்சை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆத்தூர் சாலையில் விபத்தில் சிக்கிய ஒருவரை மீட்க ஆம்புலன்ஸ் சென்ற போது, கூட்டத்தில் இருந்த சில அதிமுகவினர் சாலையை மறித்து, வாகனத்தை தடுத்து நிறுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆம்புலன்ஸ் டிரைவர், நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை எடுத்து கூறினார். ஆனால், அங்கு இருந்த அதிமுகவினர் சிலர் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக கூட்டம் நடக்கும் போது நோயாளி இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி திமுக இடையூறு செய்வதாக எடப்பாடி பழனிசாமி அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில்தான், திருச்சியில் ஆம்புலன்ஸ் செல்ல விடாமல் திருப்பி அனுப்பிய நிகழ்வு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.