அலைபாயுதே படப்பாணியில் திருமணம்... கழிப்பிடத்தில் குழந்தை பெற்ற பெண்... அடுத்து நடந்த பரபரப்பு
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பெண் வேலை செய்து வந்துள்ளார்.;
திருப்பூர்,
திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையத்தில் உள்ள பொதுக்கழிப்பிடத்துக்கு நேற்றுமுன்தினம் பெண் ஒருவர் சென்றார். நீண்டநேரம் ஆகியும் அந்த பெண் கழிப்பிடத்தை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அங்குள்ள பெண், உள்ளே சென்று பார்த்தபோது, அந்த பெண், குழந்தை பிரசவித்த நிலையில் மயங்கி கிடந்தார். குழந்தையும் பேச்சு, மூச்சு அற்று காணப்பட்டது.
உடனடியாக ஆம்புலன்சு உதவியோடு பெண் மற்றும் குழந்தையை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள், குழந்தையை பரிசோதித்து பார்த்துவிட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் பற்றி அறிந்ததும் வடக்கு போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்தனர்.
விசாரணையில் அவர் திருச்சியை சேர்ந்த 34 வயது பெண் என்பதும், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இந்தநிலையில் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் வேலைபார்க்கும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் திருமணம் செய்து கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிலும் அந்த பெண் தங்கி இருந்துள்ளார்.
திருமணம் செய்து கொண்ட விவரத்தை அந்த பெண், பெற்றோர் மற்றும் உறவினரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார். திருச்சிக்கு சென்று பெற்றோரையும் அவ்வப்போது பார்த்து வந்துள்ளார். அலைபாயுதே படப்பாணியில் 2 பேரும் திருமணம் செய்து வாழ்ந்த நிலையில் 7 மாதம் கர்ப்பமாகியுள்ளார்.
இந்தநிலையில் தான் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பெண்ணின் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏறடுத்தியுள்ளது.