நெடுஞ்சாலைத்துறையில் 45 உதவிப்பொறியாளர்களுக்கு பணிநியமன ஆணை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்...!
மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை உட்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.;
நெடுஞ்சாலைத்துறையில் 45 உதவிப்பொறியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பணிநியமன ஆணைகள் வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறுகையில்,
நெடுஞ்சாலைத் துறையில் 45 உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (19.08.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 45 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
ஒரு மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை உட்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு அரசு தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை உருவாக்கிடும் வகையில், நெடுஞ்சாலைத்துறை வாயிலாக மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், மேம்பாடு செய்தல், புதிய பாலங்களை கட்டுதல் தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல் ஆகிய பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத் துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் 416 இளநிலை வரைதொழில் அலுவலர்கள், 84 உதவிப் பொறியாளர்கள், 186 உதவியாளர்கள், 139 இளநிலை உதவியாளர்கள், 73 தட்டச்சர்கள், 3 தணிக்கை உதவியாளர்கள், 7 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் நிலை - III ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திலும், 45 இளநிலைப் உதவியாளர்கள், 3 உதவி வரைவாளர்கள், 9 தட்டச்சர்கள், 15 பதிவுரு எழுத்தர்கள் மற்றும் 36 அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் கருணை அடிப்படையிலும், என மொத்தம் 1016 நபர்கள் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நெடுஞ்சாலைத்துறையின் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 45 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.