மாமல்லபுரத்தில் பாஜக மையக்குழு கூட்டம்; முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற்ற உள்ளது.;
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற்ற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, பிரசாரம், தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பாஜக மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
சிந்தனை அரங்கம் என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், அண்ணாமலை, பாஜக மாநில பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், கரு.நாகராஜன், பாஜக மாநில துணைத்தலைவர்கள், செயலாளர்கள், பாஜகவில் உள்ள 7 அணிகளின் தலைவர்கள் உள்பட சுமார் 70 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை, கூட்டணி, கூட்டணிக்குள் ஏற்படும் குழப்பங்கள், தேர்தல் வெற்றிக்கான வழிமுறைகள், கூட்டணியை வலுப்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.