‘விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது’ - சென்னை ஐகோர்ட்டு
புளியந்தோப்பு காவல் ஆய்வாளருக்கு எதிராக மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.;
சென்னை,
சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவரிடம் மயிலாப்பூரைச் சேர்ந்த விஜயகிருஷ்ணன் தன்னுடைய மாமனாரின் சொத்து பத்திரத்தை அடமானமாக வைத்து 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில், அடமானமாக வைத்த சொத்து பத்திரத்தை வேணுகோபால் திருடிவிட்டதாக புளியந்தோப்பு காவல்நிலையத்தில் விஜயகிருஷ்ணன் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி வேணுகோபாலுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். அதன்படி விசாரணைக்கு ஆஜரானபோது சொத்து பத்திரங்களை விஜயகிருஷ்ணனிடம் கொடுக்கும்படி காவல்துறையினர் தன்னை மிரட்டியதாக கூறி புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் ரவி, உதவி ஆய்வாளர் ஷகிபா ஆகியோருக்கு எதிராக வேணுகோபால் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையம், ஆய்வாளர் ரவி மற்றும் உதவி ஆய்வாளர் ஷகிபா ஆகியோருக்கு தலா ரூ.10,000 அபராதம் விதித்ததுடன், இருவருக்கும் எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து காவல் ஆய்வாளர் ரவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆய்வாளர் ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜயகிருஷ்ணனின் புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்கும் நோக்கில் மட்டுமே வேணுகோபாலை காவல் நிலையத்திற்கு அழைத்ததாகவும், காவல் ஆய்வாளர் தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்காமல் மனித உரிமை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது என்றும், விசாரணையின்போது புகார்தாரரான வேணுகோபால் துன்புறுத்தப்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறி, புளியந்தோப்பு காவல் ஆய்வாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதே போல், ரூ.10,000 அபராதம் விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.