அடுக்குமாடி குடியிருப்புகளில் பொருத்த ஒரு லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் - சென்னை குடிநீர் வாரியம் தகவல்
அடுத்த மாத இறுதிக்குள் குடிநீர் மீட்டர்களை பொருத்த சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.;
சென்னை,
குடிநீர் விநியோகம் மற்றும் பயன்பாட்டை உடனடியாக கண்காணிக்க ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. நுகர்வோரின் மொபைல் போன்களுக்கு துல்லியமான கட்டண விவரங்களை அனுப்பவும், தண்ணீர் கசிவைக் கண்டறிந்து வீணாவதைத் தடுக்கவும், எதிர்பாராத கட்டணங்களைத் தவிர்க்கவும் இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொருத்த ஒரு லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதன்படி 2,400 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்புகளுக்கு ஸ்மார்ட் குடிநீர் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த மாத இறுதிக்குள் குடிநீர் மீட்டர்களை பொருத்த சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக சென்னையில் வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், அடுக்குமாடி குடியிருப்புகளில் நீச்சல், குளம், தோட்டங்களுக்கு, கார்களை கழுவுவதற்கு குடிநீர் வீணாக்கப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.